நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்துக்குப் பின் படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார். நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்தடுத்து அதோ ‘அந்த பறவை போல’, ‘ஆடை’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

சமீபத்தில் வேட்டி அணிந்தபடி இருந்த அமலாபாலின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த வரிசையில், புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக திருட்டுப் பயலே 2 படத்திலும் தம் அடிப்பது போல நடித்திருந்தார்.

அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு, “புகைப்பிடிப்பதை நான் ஊக்குவிக்கவில்லை, ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன். ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிப்பது போன்ற பிரபல காட்சி ஒன்று இருக்கும். அந்த வகையில் இது எனக்கான காட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியும், கண்டனம் தெரிவித்தும் வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சமீபத்தில் ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது தோற்றம் சர்ச்சைக்குக் காரணமானது. இதில், அவர் மிகவும் ஆபாசமாக உடையில் காட்சி அளிப்பதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.