கொரோனாவின் உருமாறிய ‘ஓமைக்ரான்’ வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதல்முறையாக கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

ஓமைக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஓமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வகை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இதனால் உலகின் பல நாடுகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவும் தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், போத்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எச்சரிக்கை பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஒன்றிய அரசு.

இந்நிலையில் ஓமைக்ரான் வகை வைரஸ் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “ஓமைக்ரான் வகை வைரஸ் குறித்து மிகுந்த விழிப்பாக இருக்க வேண்டும். சர்வேச பயணிகளையும், உள்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள், நபர்கள் குறித்து கூடுதல் விழிப்புணர்வுடன், கண்காணிப்புடன் இருப்பது அவசியம் இல்லாவிட்டால் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துவிடும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமைக்ரான் வைரஸ், மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை. அதாவது தடுப்பூசியையும் எதிர்க்கும் அளவுக்கு வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 30 உருமாற்றங்கள் நடந்துள்ளன.

பெரும்பாலான தடுப்பூசிகள், ஸ்பைக் புரதத்துக்கு எதிராகவே நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் அதிகமான உருமாற்றங்கள் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைத்துவிடும்.

தடுப்பூசிகளின் செயல்திறன் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் அதன் செயல்திறனை ஓமைக்ரான் வைரஸுக்கு எதிராக மறுமதிப்பீடு செய்வது அவசியம்.

ஓமைக்ரான் வைரஸ் பரவல், தடுப்பூசியை எதிர்க்கும் திறன், தீவிரத்தன்மை ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் தான் எதிர்காலச் செயல்பாட்டை தீர்மானிக்கும். எனவே மூன்றாவது அலை குறித்து இப்போதே பேசுவது கூடாது அதற்கான சூழலும் இந்தியாவில் இல்லை.

ஆனால், மக்கள் மத்தியில் சில மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது. இந்த நேரத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை முறைப்படி செய்வது அவசியம்” என்று குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், “இந்த உருமாறிய கொரோனா வகையை நமக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் நாம் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை தான் இது.

நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. மரபணு வரிசைப்படுத்துதலை அதிகரிப்பது, கேஸ்கள் அதிகரிக்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை ஓமைக்ரான் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்.

இந்த ஓமைக்ரான் உருமாறிய கொரோனா டெல்டா வகையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதுகுறித்து வரும் காலங்களில் தான் நமக்குத் தெளிவாகத் தெரியும். இந்த புதிய உருமாறிய கொரோனா வகை குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள நமக்கு இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை. அப்போது தான் இந்த உருமாறிய கொரோனா குறித்து நம்மால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஓமைக்ரான் உருமாறிய கொரோனா பெரியளவில் மாற்றங்களைக் கொண்டுள்ளது. எனவே, இது ஆபத்தானதாக இருக்கலாம். அதே சமயம் இதற்கு வேக்சின்களில் இருந்து தப்பும் ஆற்றல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

Genome sequencing எனப்படும் மரபணு வரிசைப்படுத்துதல் மூலமே உருமாறிய கொரோனா வகைகளை நம்மால் கண்டறிய முடியும். கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் மரபணு வரிசைப்படுத்துதல் மிக மிக முக்கியமானது. சில நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. கடந்த காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நமக்குப் பெரியளவில் பயன் தரவில்லை. எனவே, இதுபோன்ற பயணத் தடைகள் தற்காலிகமாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.