நியூஸிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதன்பிறகு ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மே, ஜூலை மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
 
இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இருந்தும், டி20 தொடரில் இருந்தும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 
“கடந்த சில மாதங்களாக விராட் கோலியின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன் அவருக்கு ஓய்வு வழங்குவது தகுந்ததாக இருக்கும் என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் கருதுகின்றனர்.
 
அதனால், கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார். நியூஸிலாந்து தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரர் கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டது.    
 
உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்திய அணியின் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. நியூஸிலாந்து தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஏற்கனவே ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தற்போது கோலிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் இலகுவாக இந்திய அணி நியூஸிலாந்து வென்றதும் குறிப்பிடதக்கது.