குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூர் கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று (15.12.2021) உயிரிழந்தார்.

கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து விபத்திற்கான காரணங்களை அறிய காவல்துறை, ராணுவம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அங்கிருந்து சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (15.12.2021) காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் (வயது 39) உயிரிழந்துள்ளார் என இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை எந்த ஒரு சேதமும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கியதற்காக கேப்டன் வருண் சிங்கிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

கேப்டன் வருண் சிங் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை இந்திய ராணுவதில் கர்னலாக பணியாற்றினார். அவருடைய சகோதரர் தற்போது இந்திய கப்பற்படையில் பணியாற்றி வருகிறார். வருணிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தலைவர்கள் தங்களின் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “பெருமையுடன் நாட்டிற்காக பணியாற்றினார் குரூப் கேப்டன் வருண் சிங். அவரின் மரண செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவருடைய சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குன்னூர் அருகே நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன்.

அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும் மேலும் அவர் என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.