காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்தவர் லவ்லினா போர்கோஹைன் (24 வயது). டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் லவ்லினா. இவர் பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த தொடக்க இந்திய ஓபனில் தங்கம் வென்றபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடினார்.

இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருக்கிறார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா. ஆனால் அங்கு தனது பயிற்சி தடைபட்டு, மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா வெளியிட்டுள்ள பதிவில், “காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்றுவிட்டது.

கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது. தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டார். இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.