பீகார் மாநிலத்தில் பரவிய வதந்தி காரணமாக, கடைகளில் ரூ 5 ஆக இருந்த ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் ரூ 50-க்கு விற்கப்பட்ட போதும் பிஸ்கட் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின்போது குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒருநாள் முழுவதும் நோன்பு இருப்பார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி இந்த நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது. பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் ஜிதியா பண்டிகையில் ‘ஆண் குழந்தைகள் பார்லே-ஜி பிஸ்கட் சாப்பிடாமல் இருந்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும்’ என்ற வதந்தி வேகமாகப் பரவியது.

குறிப்பாக ஊரக பகுதிகளான பர்கானியா, தேஹே, நான்பூர், பாஜ்பட்டி, மேஜார்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் வதந்தி பரவியது. பீகார் மக்கள் இதனை நம்பி ஏமார்ந்தனர். இது சமூகவலைதளங்களிலும் பரவி வைரலானது.

இதனையடுத்து பெற்றோர்கள் கடைகளில் இருக்கும் பார்லே-ஜி பிஸ்கட்டை வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியதால் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க பலரும் கடைகளுக்கு முண்டியடித்தனர். பல கடைகளில் பிஸ்கட் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திடீரென பார்லே-ஜி பிஸ்கட்டுக்கு கிடைத்த மவுசால் ரூ.5க்கு விற்பனையாகும் பிஸ்கட்டை ரூ.50க்கு விற்று பல கடைக்கார்கள் கொள்ளை லாபம் ஈட்டினர். பலர் இந்த பிஸ்கட்டை பதுக்கி வைத்து மேலும் அதிக விலைக்கு விற்றனர். இதனால் கடைகளில் சில நிமிடங்களிலேயே அனைத்து பார்லே-ஜி பிஸ்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

இதனால் பீகார் முழுவதும் பெற்றோர்கள் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க வீதி வீதியாக அலைந்தனர். இந்த வதந்தி எப்படி பரவியது என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து பீகார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமனம்- முதல்வர் யோகி ஆதித்யநாத்