சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார் ஆனால்  அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அதில், “சிபிஐ இயக்குனராக இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்து கட்டாய விடுப்பில் அனுப்புவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் கடந்த 8-ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. சி.பி.ஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் தொடர்ந்து சி.பி.ஐ இயக்குனராக நீடிக்கலாம்.
 
எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்தி வரும் விசாரணை முடிவடையும் வரை அவர் கொள்கை அடிப்படையிலான எவ்விதமான முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
 
சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுதான் எடுக்க வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். தேர்வுக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்ட வேண்டும் என்று கூறியது.
இதனையடுத்து கடந்த 9-ம் தேதி மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா பொறுப்பேற்றார். இந்நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
பிரதமர் மோடி, மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உயர்நிலைக் குழு, வியாழக்கிழமை கூடி விவாதித்தது. அப்போது மல்லிகார்ஜுந கார்கே தவிர பெரும்பாலோருடைய ஆதரவுடன் சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் குமார் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. சிபிஐ வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு இயக்குநர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
 
மல்லிகார்ஜுனா கார்கே எதிர்த்த போது 2:1 என்ற அடிப்படையில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நியமனக்குழு நீக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது .
 
காங்கிரஸ் கட்சி ரபேல் ஊழலில் சிக்குவோம் என பயந்து மோடி இந்த முடியவை எடுத்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது .
 
இந்நிலையில், தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். பிரதமர் தலைமையிலான உயர்நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஊழல் கண்காணிப்புத்துறை நியமித்தது.
 
புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
சிபிஐ இயக்குநராக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட அலோக் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.