தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
 
காலையில் மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்ற சில மணிநேரத்தில், அவர் அதிமுகவிலிருந்தே நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா, டிச. 19 (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்,’’ என்று தெரிவித்துள்ளனர்.
 
மதுரை ஆவின் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன.
 
ஆவின் நிர்வாக குழு இயக்குனர்களாக இந்த இரண்டு மாவட்டத்தில் இருந்து 17 பேரை தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் மதுரை ஆவின் தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது.
 
மொத்தமுள்ள 17 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 1,072 ஓட்டுகளில் 957 ஓட்டுகள் பதிவானது. ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளம் பால் கூட்டுறவு சங்கத்தில் 99 ஓட்டுகளில் இவர் 94 வாக்குகள் பெற்றார்.
 

ஓ.ராஜா மீது ஏற்கனவே உள்ள பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, மணல் கடத்தல் உள்ளிட்ட புகார்களும் உள்ள நிலையில் , தேர்தல் முறைகேடும் ஒருங்கே சேர இந்த நடவடிக்கையாம்

இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராஜ் 5 வாக்குகள் பெற்றார். அனைத்து நிர்வாகிகள் ஆதரவுடன், மதுரை ஆவின் சேர்மனாக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
துணைத் தலைவராக ஆவின் முன்னாள் சேர்மன் தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரின் பதவியேற்பு விழா மதுரை ஆவினில் நேற்று நடந்தது. பதவியேற்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு ஓ.ராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
அவர் நீக்கப்பட்டது தெரிந்ததும், ஆதரவாளர்களில் பலர் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கை மதுரை மற்றும் தேனி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை ஆவினில், கடந்த முறை சேர்மன் பதவி தனது ஆதரவாளருக்கு வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியிருந்தார்.
 
அதன்படி, அவரது ஆதரவாளரான மாநகர துணை செயலாளர் தங்கத்திற்கு ஆவின் சேர்மன் பதவி வழங்கப்பட்டது. இம்முறை, ஆவின் சேர்மன் பதவியை தேனி மாவட்டத்திற்கு வழங்கிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார்.
 
இதன்படியே, இம்முறை ஓபிஎஸ்சின், தம்பி ராஜாவிற்கு வழங்கப்பட்டது. இவருக்கு பதவி கொடுக்க கூடாது என தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அமாவாசை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, ‘ஆவின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் முறையாக வீடியோ ஒளிப்பதிவு செய்து தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டு, இதில் ஓ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு,
பத்திரிகையாளர்களிடம் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்பு நடத்த இருப்பதாக ஓ.ராஜா தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றே அவர் அவசர அவசரமாக பதவி ஏற்றுக்கொண்டார்.
 
 
பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் சேர்மன் ஓ.ராஜா. இவரும், பெரியகுளம் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்துவும் நெருங்கிய நண்பர்கள். செல்லமுத்து தற்போது தேனி மாவட்ட அதிமுக பொருளாளராக உள்ளார்.
 
ஆவின் தலைவர் பதவிக்கு செல்லமுத்துவும் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வமும் இவருக்கு பதவி வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், ஓ.ராஜா தனக்கே இந்த பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.
 
ஓ.ராஜா தலைவராக அறிவிக்கப்பட்டதில் ஆத்திரம் அடைந்த செல்லமுத்துவை அதிமுகவினர் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் யாருடைய சமாதானத்தையும் ஏற்க மாட்டேன் ஓ.பி.எஸ் எனக்கு பதவி அளிப்பதாக கூறி நாடகம் ஆடுகிறார். அவர் குடும்ப அரசியல் செய்கிறார்.
 
அவருடைய தம்பியை கூட சமாதானம் செய்யமுடியவில்லை என்று கூறி விரைவில் திமுகவிற்கு சென்று விடுவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.
 
இதுதவிர, ஓ.ராஜா மீது ஏற்கனவே உள்ள பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. மணல் கடத்தல் உள்ளிட்ட புகார்களும் உள்ள நிலையில் எடப்பாடி தரப்பினர் இது தான் சமயம் என்று காய் நகர்த்தி பன்னிர் செல்வத்தை வைத்தே அவர் தம்பியை நீக்கி உள்ளனர் மேலும் இதனால் பன்னிர் செல்வம் கோஸ்டி கொட்டம் தேனியிலே அடக்கப்பட்டு விட்டதாக மகிழ்ச்சியில் உள்ள்னர் எடப்பாடி அணியினர்
 
மேலும் பன்னிர்செல்வம் கோஸ்டிக்கு விழுந்த அடி அதிலும் தேனி மாவட்டத்திலே என்பது தினகரன் அணியில் உள்ள் மனவருத்ததுடன் இருக்கும் தங்கதமிழ் செல்வனுக்கு கொடுக்கும் பச்சை விளக்கு அழைப்பு என்று கண்சிமிட்டுகின்றனர் லோக்கல் அதிமுகவினர்