புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போது அது தனது நீண்ட கால கனவை நனவாக்கி கொண்டது.
 
மோர்கன் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்துவிட்டார். டாஸ் வென்றது முதல் தனது திட்டத்தைச் சரியாக செயல்படுத்தி வந்தது வில்லியம்சன்தான்.
 
தனது பேட்டிங் யூனிட்டை நன்கு அறிந்த நியுசி அணி தலைவர் வில்லியம்ஸன் ஃபைனலில் சேஸிங் செய்வது ரிஸ்க் என்பதை உணர்ந்திருந்தார்.
 
அதனால் டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் நியூசிலாந்து எடுத்தது. கட்டுக்கோப்பான பந்துவீச்சு அட்டாக்கிங் ஃபீல்டிங் மூலம் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க தீர்மானித்தார் வில்லி.
 
அவரது திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. 23 ஓவர் முடிவில் 86 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது இங்கிலாந்து.
 
ஆனால் ஸ்டோக்ஸ், பட்லரின் நிதானமான ஆட்டம் வில்லியம்ஸுக்கு நெருக்கடி கொடுத்தது.இந்தக் கூட்டணிதான் இங்கிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 50 ஓவர்கள் முடிவில் இந்தப்போட்டி டை ஆனது.
 
சூப்பர் ஓவர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த விதிப்படி இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது.
 
இங்கிலாந்து 15 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரும் டை ஆகவே, பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 
பவுண்டரிகள்தான் கிரிக்கெட்டா என முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
அது மட்டும் அல்ல ஓவர் த்ரோவுக்கு அம்பயர் வழங்கிய 6 ரன்கள் தவறானது என சர்ச்சை எழுந்துள்ளது.
 
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் பந்துவீச வந்தார்.
 
எதிர்முனையில் பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்தார். முதல் இரண்டு பந்துகளில் ரன் இல்லை. மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் சிக்ஸருக்குத் தூக்கினார்.
 
இங்கிலாந்து வெற்றி பெற மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவை. போல்ட் புல் டாஸாக வீசிய 4-வது பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்களை எடுக்க ஸ்டோக்ஸ் ஓடினார்.
 
அந்தப் பந்தை பிடித்த கப்தில் கீப்பரை நோக்கி த்ரோ செய்தார். அந்தப் பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. ஒவர் த்ரோ வகையில் 6 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதைத்தான் தற்போது முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கிரிக்கெட் விதிகளின்படி பந்து ஓவர் த்ரோவில் பவுண்டரி லைன் சென்றால் 4 ரன்கள் வழங்கப்படும். 4 ரன்கள் ப்ளஸ் அந்தப் பந்தில் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்துமுடித்த ரன்கள் சேர்க்கப்படும்.
 
அதாவது ஃபீல்டர்கள் த்ரோ செய்யும்போது ஓடி முடித்த ரன்கள். அந்த விதிப்படி த்ரோ செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் இருவரும் கடந்து சென்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் பந்தில் நடுவர் 6 ரன்கள் வழங்கினார். கப்தில் பந்தை த்ரோ செய்யும்போது பென் ஸ்டோக்ஸ், ரஷித் இருவரும் கடந்து செல்லவில்லை.
 
ஒரு ரன் ஓடி முடித்து இரண்டாவது ரன்னுக்காக ஓடத் தொடங்கினர். கிரிக்கெட் விதிப்படி நடுவர்கள் 5 ரன்கள்தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நடுவர்கள் 6 ரன்களை வழங்கினர்.
 
இதுகுறித்து பேசியுள்ள சைமன் டஃபெல், “இது ஒரு தெளிவான தவறு. இது தீர்ப்பின் பிழை என்கிறார்.