தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 7ம் தேதி முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கில் விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000 முதல் கிட்டத்தட்ட 3,000 வரை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று (15.01.2022) ஒரே நாளில் புதிதாக 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் சென்னையில் 8,978 பேருடன் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள நிலையில், செங்கல்பட்டு 2,854 பேர் புதிய பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், கோயம்புத்தூர் (1,732 பேர்), திருவள்ளூர் (1,478 பேர்) ஆகிய மாவட்டங்களில் மட்டும் நான்கு இலக்கங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் மட்டும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முகக்கவசம் அணியாமல் இருந்ததால் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 1,910 நபர்கள், 1,552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

254 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 96 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதவர் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43 ஆயிரத்து 417 நபர்களிடம் இருந்து 86 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது,

வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபர்களிடம் 83 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.