கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வார்டு, நோயாளிக்குத் தேவைப்படும் மருந்துகள் குறித்து திமுக எம்பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

மத்திய அரசிடம், கருப்பு பூஞ்சை நோய்க்குத் தேவையான மருந்துகளை மாநிலத்திற்கு அனுப்பி வைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு போதிய அளவிலான மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பவில்லை என்பது தான் உண்மை.

இதனால் நமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு வந்து சேரும் மருந்தின் அளவு மிகச்சிறிய அளவாகவுள்ளது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள பல ஆஸ்பத்திரிகள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நர்த்தகி நட்ராஜை களமிறக்கி அப்ளாஸ் அள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதல்முறை!