கோவையில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வியைத் தழுவியது அக்கட்சியினரையிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (12.10.2021) காலை 8 மணி முதல் 74 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ், அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம், பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் களம் கண்டனர்.

அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். இது தவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் என பலர் இருந்தும் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை பகுதியை தமிழ்நாட்டிலிருந்து தனியாகப் பிரிக்கிறோம் என்றெல்லாம் பாஜகவினர் கூறிவரும் நிலையில், அதே கோவையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தனது கட்சிக்காரருக்கே பாஜகவினர் வாக்களிக்காமல் படுதோல்வி அடையச் செய்ததுள்ளது பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.