சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
 
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
 
இவர் 2014-ஆம் ஆண்டு எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக ‘சஞ்சாரம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
 
சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததற்காக தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.