இதற்குதான் நாட்டுக்காக பதக்கங்களை வென்றோமா.. என கண்ணீர் மல்க கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல, தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவரை கைது செய்ய வலியுறுத்தி ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா மற்றும் காமன்வெல்த் பதக்கம் வென்ற வினேஷ் போகாட் ஆகியோரின் தலைமையில் பல சாம்பியன் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு மழை பெய்த காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் படுக்கை நனைந்ததால் வேறு படுக்கை கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

அப்போது குடிபோதையில் இருந்த ஒரு காவல் அதிகாரி, இரண்டு மல்யுத்த வீரர்களைத் தாக்கியதாகவும், சக காவல் அதிகாரிகள் அதைக் கண்டும் அமைதியாக நின்றனர் என்றும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கண்ணீர் மல்க பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் “அவர்கள் எங்களிடம் இப்படி நடந்துகொள்வதற்கு நாங்கள் என்ன குற்றவாளிகளா. காவல்துறையினரால் நான் துன்புறுத்தப்பட்டுத் தள்ளப்பட்டேன். பெண் காவலர்கள் எல்லாம் எங்கே போனார்கள். நாங்கள் இப்படிப்பட்ட நாட்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா “என்னுடைய பதக்கங்கள் அனைத்தையும் திரும்பப்பெறுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று (04.05.2023) வழக்கை முடித்து வைத்தது.

அதில், “குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் நீங்கள் இங்கு வந்தீர்கள். இரண்டு கோரிக்கைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட நீதித் துறை நீதிமன்றத்தையோ நாடுங்கள்” என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்தது.

முன்னதாக, வீராங்கனைகளின் புகார் தொடர்பாக ஒய்வு பெற்ற அல்லது பொறுப்பில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வீராங்கனைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தார். எனினும், இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு பின்னடைவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளது. எங்களின் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், “அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிப்போம். மூத்தவர்களின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.