அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசிவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் ஒரு வீடியோவில், தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களின் அப்பா வந்தால்கூட தன்னை கைது செய்ய முடியாது என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கொரோனா 2வது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் இருக்கும் அசத்தைப் போக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அலோபதி மருத்துவம் குறித்து தவறானத் தகவல்களையும் பிரச்சாரத்தையும் பதஞ்சலி என்ற ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் முன்னெடுத்ததால் இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்தது. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டித்ததைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் கோரினார்.

இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 10,000 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். அலோபதி மருத்துவத்தால் தான் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ராம்தேவின் இந்த அவதூறு பிரசாரம் மருத்துவர்களை மட்டுமின்றி கொரோனா முன்களப் பணியாளர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில், “ராம்தேவின் இந்த பொய், அவதூறு பிரசாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அழைப்பு விடுத்த போது எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தான் போட்டுக் கொண்டனர்.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் கீழ்தான் நவீன மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் பல லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால் ராம்தேவ் போன்றவர்கள், இந்த நவீன மருத்துவம் தான் பல லட்சம் பேர் மரணத்துக்கு காரணம் என பேசியிருப்பது ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானதாகும். ஆகையால் இந்த பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்தி ராம்தேவ் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் பாபா ராம்தேவ் அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள பாபா ராம்தேவ், “என்னை கைது செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள் எல்லாம் வெறு வாய்ப்பேச்சு தான், சத்தம் தான் போடமுடியும்.

என்னைப் பற்றி பலவாறு அவதூறு பரப்பலாம், ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யலாம். ஆனால் என்னைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் அப்பனால கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது” என்று ஆணவமாகக் கூறியுள்ளார்.

பாபா ராம்தேவின் இந்த மிரட்டல் சர்ச்சை பேச்சு கொரோனாவை தடுக்க உயிரை பணயம் வைத்து பணி புரியும் மருத்துவர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு, அகங்காரத்தின் உச்சத்தில் ராம்தேவ் பேசுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்