ஏ.ஆர். முகேஷ் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு”. இப்படத்தில், விமலுடன் இணைந்து ஆஸ்னா ஜவேரி, நடிகை சன்னி லியோனின் தங்கை மியாராய் லியோன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலி கான் உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான குண்டூர் டாக்கீஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாகிவுள்ளது.

வீடு புகுந்து சின்ன சின்ன பொருள் திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள், பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு. முழுக்க முழுக்க அடல்ட் காமெடியான இப்படம் முழுவதும் டபுள் மீனிங் வார்த்தைகள் கொண்டதாக உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இப்படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்றும், பெண்களை கேலி செய்யும் வசனங்களும் நிறைய உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்பிளக்ஸுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். காம்பிளக்ஸில் ஒட்டியிருந்த விமல் பட போஸ்டர்களை செருப்பால் அடித்ததுடன் கிழித்து எறிந்தனர். இந்த ஆபாச படத்திற்கு உடனே தடை விதிக்கக் கோரி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தவர்களிடம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். பெண்களின் ரகளையால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. மாதர் சங்க போராட்டத்தால் தியேட்டரில் படம் பார்த்த ஆண்கள் அனைவரும் எழுந்து சென்றனர்.