இயற்கை சுற்றுச்சூழல் தேசியம் வர்த்தகம் வாழ்வியல்

இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இன்று (நவம்பர் 9) நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன.

இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது பற்றி உரிய பதிலளிக்குமாறு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பசுமை தீர்ப்பாயம் உத்தரவில், நாடு முழுவதும் காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள், மாநகரங்களில் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து விதமான பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கொரோனாவைக் கருத்தில் கொண்டும் டெல்லி பெருநகரம் முழுவதுமாக பசுமை பட்டாசுகள் உள்பட எந்த வகை பட்டாசுகளும் விற்க, வெடிக்க முழு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எந்தெந்த நகரங்களில் காற்று மாசு மோசமாக இருந்ததோ அந்த நகரங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அதே நேரத்தில் காற்று மாசு மிதமாக உள்ள நகரங்களில் ஏற்கனவே அந்த மாநிலங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடரலாம் என்று கூறப்படுள்ளது.

இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்காத மாநிலங்களில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம். அதேபோன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று நள்ளிரவு 11:55 முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என்று இன்றைய இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வழக்கு மீண்டும் டிசம்பர் 01 ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.