இந்தியாவின் மிகவும் உயரமான மனிதர் என்று அறியப்பட்ட தர்மேந்திர பிரதாப் சிங் (8 அடி 2 அங்குலம் உயரம்) நேற்று (23.1.2022) சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் அங்கு காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பணியாற்றி வருவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடைபெற 2 வாரங்களே உள்ள நிலையில், ஆளும் பாஜக யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 8 அடி 2 அங்குலம் உயரம் உள்ள நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் நேற்று இணைந்தார். 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நண்பர் ஒருவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, “கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவின் தலைமை மீது நம்பிக்கை வைத்து, பிரதாப்கரைச் சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், தர்மேந்திர பிரதாப் சிங்கின் வருகையால் சமாஜ்வாதி கட்சி வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்” என்றார்.

இதுகுறித்து தரமேந்திர பிரதாப் சிங் கூறும்போது, “என்னுடைய உயரத்தால் நான் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நான் வெளியில் செல்லும்போது எல்லாம் அதிக கவனத்தை ஈர்க்கிறேன். நான் மிகவும் பிரபலமாக இருக்கிறேன், எல்லாவற்றுக்கும் எனது உயரம் தான் காரணம். சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.