அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்.

தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. கடலூரில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததோடு, சாலைகளும் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. குறிப்பாக பெரிய வாய்க்கால், உப்பாறு கால்வாய், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காமராஜர் சாலை, வள்ளலார் சாலை போன்ற சாலைகளில் கயிறு கட்டி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியில் வெள்ளவாரியில், அதிகாலை முதல் பெய்து வரும் மழையினால், வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது சண்முகாபுரம் மீன் மார்க்கெட் அருகே ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண்ணை வெள்ளம் அடித்துச் சென்றது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களும் தேவையான வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்..