திருச்சி பொன்மலைப்பட்டியில் ரயில்வே இடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருந்த பஸ்நிழற்குடையின் மேற்கூரை கஜா புயல் தாக்கத்தில் சேதமானது.
 
இதையடுத்து, எம்.பி. குமார் தனது தொகுதி நிதியில் இருந்து புதிய நிழற்குடை கட்ட முடிவு செய்தார். இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது.
 
ஆனால், ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்ததும் அங்கு வந்த ஆர்பிஎப் போலீசார் பொக்லைனை பறிமுதல் செய்து சென்றனர்.
 
இதுபற்றி எதிரே விறகு கடை வைத்துள்ள தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜின் அண்ணன் பெரியசாமிதான் போலீசுக்கு தகவல் தந்ததாக குமார் எம்.பி. கருதினார்.
 
உடனே, கடைக்கு சென்று பெரியசாமியின் கன்னத்தில் குமார் அறைந்தார். அப்போது தந்தையை தாக்கியதை பார்த்த பெரியசாமியின் மகன் பதிலுக்கு குமார் எம்.பி.யை கன்னத்தில் அறைந்து தாக்கினார்.
 
இதனால் அங்கு இருந்து தப்பி ஒடி காரில் ஏறி சென்ற குமார், சிறிது நேரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சகாதேவபாண்டியன் மற்றும் குண்டர்களுடன் அங்கு வந்தார்.
 
குண்டர்கள் கையில் உருட்டு கட்டைகளுடன் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த திமுக பகுதி செயலாளர் அலுவலகத்தையும் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. விடியோ விவரத்துக்கு கிளிக் செய்யவும் 
 
இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், குமார் எம்.பி.யை தாக்கியதாக பெரியசாமி மகன் கோபி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் பொன்மலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.