இந்தியாவிலும் #MeToo பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார்.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பேசியதாவது, “என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் அவர்கள் பணம் வாங்கியிருப்பார்க்ள், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள்.
தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார். பாலியல் தொல்லை குறித்து அதிதி பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.