7 வயது சிறுமியை மிக கொடுமையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனிடையே, #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக்கில், இது என்ன நாடா? இல்லை காடா? என்று கேள்வி எழுப்பி மக்கள் தங்கள் வேதனையைத் தெரிவித்து வருகின்றனர்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா. கடந்த ஜூன் 29-ம் தேதி மாலையில் வீட்டின் அருகே விளையாடிய குழந்தை திடீரென காணாமல் போனதால், பதறிய பெற்றோர், உறவினர்கள் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைதேடிவந்தனர். இதனிடையே, ஜூலை 2-ம் தேதி காலையில் உயிரற்ற உடலினை, சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் கண்டெடுத்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டுள்ளது. பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஜெயப்பிரியாவின் கொலை தொடர்பான விசாரணையில் ராஜேஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியை தான் தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் வாசிக்க: முக்கிய சாட்சியான காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு- உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடைச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு சிறுமி!
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது!
பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது!
இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) July 2, 2020
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது. பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு, இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்கு உள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது என பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பியுள்ளனர்.