அடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது “கோமாளி” படத்தில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவி, “ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்கிறேன். புதிய படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவாகியிருந்தது. ஆனால் ஒருசில ஊடகங்கள் இந்த மூன்று படங்களுக்கான சம்பளத்திற்கு பதிலாக ஜெயம் ரவிக்கு, தயாரிப்பாளர் தரப்பு போயஸ் கார்டனில் 20 கோடியில் வீடு ஒன்றை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்பட பல விவிஐபிக்களின் வீடு உள்ள போயஸ் கார்டனில் வீடு வாங்குவது ஜெயம் ரவியின் கனவு என்றும் தற்போது அது நிறைவேறிவிட்டதாகவும் செய்திகள் வைரலாகின.
இந்நிலையில் இந்த செய்திக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். போயஸ் கார்டனில் வீடு பெற்றதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு செய்தியை வெளியிடும் முன் அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட வேண்டும் என்றும் கூறி கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த வதந்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.