நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு அரசு நிதிப்பற்றாக்குறையே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ம் தேதி நடத்தப்படும் போலியோ சொட்டுமருந்து முகாமை காலவரையின்றி தள்ளிவைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வு துறை கடிதம் எழுதியுள்ளது.
 
இதன் எதிரொலியாக தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம் தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருதினங்களுக்கு முன் அறிவித்த நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளவுக்கு மத்திய அரசிடம் மருந்து கையிருப்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
 
போலியோ சொட்டுமருந்து வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.280 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் போலியோ மருந்து வாங்கப்படவில்லை.
 
இதனால் போலியோ சொட்டுமருந்து வாங்க உலக சுகாதார நிறுவனத்தின் தயவை மத்திய அரசு நாடியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.