லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஊழல் நடந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் புகார் அளித்தார்.
அதில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் கட்டணத் தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க உரிய அமைப்புகளை வேண்டி இருக்கிறோம் என்றும் கூறி இருந்தார். இது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து டெல்லி லோதி சாலையில் உள்ள ஒரு அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அதில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் எஸ்.கே சர்மா உள்ளிட்ட 4 பேர், தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் அவரது பணியாளர்கள் 2 பேர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சில அதிகாரிகள் மீது ஊழலை குற்றசாட்டு எழுந்தவுடன் அவர்கள் பற்றிய விவரங்களை உரிய அமைப்புகளுக்கு வழங்கியதன் எதிரொலியாகவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.