தமிழ் சினிமாவிற்கு பல ஈடுஇணையற்ற நடிகர்களை உருவாக்கித் தந்த ‘கூத்துப்பட்டறை ந.முத்துசாமி’ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். எழுத்து, நாடகம், சினிமா என கலைத்துறையைச் சேர்ந்த பலரும் ந.முத்துசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த ந.முத்துசாமி 1936ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிறந்தார். தமிழின் முக்கியமான நாடக ஆசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுவர். கசடதபற, நடை போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. நாடகக்கலையின் மீதும் நடிப்புக்கலையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் கூத்துப்பட்டறை என்ற நிகழ்த்துக்கலை அமைப்பை நிறுவியவர்.
இவரது கூத்துப்பட்டறை மூலம் நாசர், விஜய் சேதுபதி, விதார்த், விமல், விஷால், பசுபதி, தலைவாசல் விஜய், சண்முகராஜன், குரு சோமசுந்தரம் என பல முன்னணி நடிகர்களை உருவாக்கியிருக்கிறார். மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதே ந.முத்துச்சாமி தனது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த மிகச்சிறந்த பாடம்.
கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக இருந்த விஜய்சேதுபதியை நடிகராக்கிய பெருமைக்குரியவர் முத்துச்சாமி. ஆண்டவன் கட்டளை படத்தில் நாசர் நடித்திருந்தது முத்துச்சாமி கதாபாத்திரத்தில் தான். இந்நிலையில், முத்துசாமியின் மறைவுக்கு அவரது மாணவரான நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்கிறேன். கூத்துப்பட்டறையின் தந்தை.. எங்கள் ஆசான் முத்துசாமி அய்யா காலமானார்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவில் முன்னணியில் இருப்பவர்கள் ஏராளம். சத்தமின்றி பல சாதனையாளர்களை உருவாக்கி கலைக்கு பெருமையும் புகழையும் சேர்த்த முத்துசாமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.