காந்தியடிகள் நினைவுநாளில் கோட்சே, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மதவெறி ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவுநாள் இன்று (30.1.2022) நாட்டு மக்களால் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி அவர்களும் காந்தியடிகள் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட இந்திய மக்களின் மாபெரும் தலைவராக விளங்கிய காந்தியடிகளை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற இந்த நாளை “மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்” என்ற தலைப்பின் அடிப்படையில் கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இடதுசாரிகள், திராவிடர் இயக்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் உறுதி மொழி வாசிக்க மற்றவர்கள் அதனை வழிமொழிந்து உறுதி ஏற்றனர்.
ஜாதிமத வெறுப்பு அரசியலை விதைத்து மக்களிடையே மதவெறியை உருவாக்கிட துணியும் கோட்சேவின் வாரிசுகளால், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஜி.ராமகிருஷ்ணன் வாசித்து கொண்டிருந்த போது திடீரென காவல்துறையினர் அங்கு வந்து தடுத்து நிறுத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கத்தினர் காவல் துறையினருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும், “மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்” என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் மகாத்மா காந்தி நினைவுநாளில் கோட்சே, ஆர்எஸ்எஸ் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. மேலும் அந்த காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.