பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் மாவட்டச் செயலர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா என்ற தனியார் பள்ளி வளாகத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்னர் தந்தை பெரியார் திராவிட கழகம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (31.12.2021) திராவிட கழகங்கள் முற்றுகையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயிற்சி முகாம் நடக்கும் பள்ளி அருகே மாநகரக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட மாநகரக் காவல்துறையின் வடக்கு உட்கோட்ட துணை ஆணையர் ஜெயச்சந்திரன் வந்தபோது, பள்ளியின் வாசலில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வளாகத்துக்குள் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால், அவர்கள், காவலர்கள் உள்ளே செல்ல மறுத்து நுழைவாயிலில் நின்றபடி துணை ஆணையரிடமும், அங்கிருந்த பிற காவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலர் முருகன், பாஜகவின் காளிதாஸ், இந்து முன்னணி வடக்கு மாவட்டச் செயலர் கோவிந்தன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அருண், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில், பீளமேடு காவல்துறையினர் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கண்ட ஆர்எஸ்எஸ், பாஜக பிரமுகர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.