வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் BH என துவங்கும் Bharat series பதிவு எண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலை வரியையும் உரிமையாளர்கள் கட்ட வேண்டும்.
தொழில் மற்றும் வேலை ஆகியவை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும் நிலை தற்போது பலருக்கு நிலவி வருகின்றது. அவ்வாறு செல்பவர்களின் பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் புதிய பாரத் வரிசை (Bharat series) என்கிற புதிய பதிவு முறையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி பிஎச் (BH) வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள்,
ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும்.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் ‘பிஎச் – பாரத் தொடர்’ (BH – Bharat series) எனத் தொடங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுற்றியுள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு