தஞ்சை தெற்கு வீதியில் மனோகரன், இவரது மனைவி வளர்மதி ஆகியோர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.
 
இவர்கள், அம்மன்பேட்டை அருகே ஆற்காடு கிராமத்தில் 4.84 ஏக்கர் நிலம் வாங்கி அதில் பண்ணை தோட்டம் உருவாக்கினர்.
 
அந்த இடத்தை சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் மிரட்டி விலைக்கு வாங்கியதாக மனோகரன்- வளர்மதி சார்பில் புகார் கூறப்பட்டது.
 
அதன்படி 11 பேர் மீது தஞ்சை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் 11 பேரும் ஆஜராகாததால் திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
 
அதன்பேரில் 7 பேர் ஆஜராகி ஜாமீனில் வந்தனர். இந்நிலையில் நேற்று திருவையாறு கோர்ட்டில் தஞ்சை அமமுக மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆஜரானார்.
 
அவரை, கோர்ட் கலையும் வரை நீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 
மேலும் இந்த வழக்கில் இன்னும் ஆஜராகாத சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் உட்பட 11 பேரும் வருகிற 28ம் தேதி ஆஜராக நீதிபதி மணிகண்டன் உத்தரவிட்டார்.