ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான  வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 
அப்பெண்ணின் உடலை உறவினர்கள்  கூட இல்லாமல் மாநில காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினர்
 
இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்ட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 
இத்தகைய சூழலில், இச்சம்பவம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றாக சோ்த்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
 
சம்பவத்தின் விசாரணையை வெளிப்படையாக நடத்தவும் விசாரணையை உத்தர பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்ற உத்தரவிடவும் பொதுநல மனுவில் கோரப்பட்டிருந்தது.
 
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின்  முன் விசாரணை நடைபெற்றது.
 
அப்போது, உத்தர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்  மேத்தா வாதிடுகையில், ‘‘ஹாத்ரஸ் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 
இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில்  நேர்மையாக  விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும். உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில்  கீழ் சிபிஐ இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவிக்கிறது’’ என்றார்.
 
மனுதாரா்கள் சிலரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜைசிங் வாதிடுகையில், ‘‘பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.
 
மற்றொரு வழக்குரைஞர் கிரிதி சிங் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில்  விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார் .
[su_spacer]
[su_spacer]
அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘ஹாத்ரஸ் சம்பவம் கொடூரமானது. இது அதிர்ச்சியளிக்கும் விவகாரமாக உள்ளது. இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
 
இந்த வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது தொடர்பாக உத்தர பிரதேச அரசு வரும் 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.
 
அதேபோல், இந்தச் சம்பவம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்  தரப்பில் வாதிடுவதற்கு வழக்குரைஞரை ஏற்பாடு செய்யும் பணியையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை எந்தவித இடையூறுமின்றி நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்.
 
இந்தச் சம்பவத்தின் விசாரணையை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடத்துவது தொடர்பான  கருத்துகளையும், விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் மனுதாரர்களும் எதிரதரப்பினரும் தெரிவிக்கலாம்’’ என்றனர் .
 
ஹாத்ரஸ் சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே இளம் பெண்ணின் சடலம் அதிகாலை 2.30 மணிக்கு எரிக்கப்பட்டது என்று உ.பி. அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் யோகி அரசு  தனது தரப்பில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இது தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில்  ” ஹாத்ரஸ் சம்பவத்தில் இளம் பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்ட நிர்வாகத்துக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வன்முறை நிகழ்வுகள் உருவாகக் கூடும் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. இதன் காரணமாகவே இளம் பெண்ணின் சடலம் அதிகாலையில் எரியூட்டப்பட்டது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.