கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (ஜூன்-24) இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்ம்ரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பான அவசரச் சட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 1540 வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதன்படி, இனி கூட்டுறவு வங்கிகளுக்கான தலைமை செயலதிகாரியை நியமிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..
இதுமட்டுமல்லாமல், விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய விண்வெளி வாரியத்தை (Indian National Space Promotion and Authorisation) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இந்திய விண்வெளி ஆய்வு உள்கட்டமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படும். மேலும், மார்ச் 31ஆம் தேதி வரையிலான சிஷூ கடன்களுக்கு, 12 மாதங்களுக்கு 2% வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பால், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்துதலுக்காக ரூ.15,000 கோடி உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.