ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில்களையும் ரத்து செய்து, டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த மொத்தம் 13,100 ரயில்களின் சேவை மார்ச்.24 முதல்  ரத்து செய்யப்பட்டது. பின்னர் மே.12 முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கும் எனக் கூறி, முதலாவதாக டெல்லியிலிருந்து 15 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் வாசிக்க: மே 12 முதல் தொடங்குகிறது முதற்கட்ட ரயில் சேவை

இந்நிலையில் இன்று 14 மே, 2020 ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெயில் (Mail), எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை, முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும்.

அதே சமயம் சிறப்பு ரயில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஷார்மிக் ரயில்கள்ள தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ரயில்வே சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு அமலில்வந்து 50 நாட்களுக்கு மேலாகியும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களை தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லாமல், அவர்களின் மனநிலையோடும், நம்பிக்கையோடும் விளையாடி வரும் பாஜக அரசுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.