விரைவில் திரைக்கு வர உள்ள “பரியேறும் பெருமாள்” படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், “மற்றவர்கள், தன்னை ஒரு சாதி வெறியனாக பார்ப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
கிடைக்கும் மேடைகளில் தான் முன்னெடுக்கும் தலித் அரசியலைப் பேசக்கூடியவர் ரஞ்சித். அப்போது அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மேற்கோள் காட்டி, அம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா.இரஞ்சித் பேசினார்.
மேலும், உனக்கும் எனக்கும் பிரச்சனை என்று வரும்போது, அந்த பிரச்சனையை உன்னிடம் பேசி தீர்ப்பதுதான் எனக்குயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.
என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.
மேலும் நான் பேசும்போது மற்றவர்களுக்கு சாதி வெறியனாகத் தெரிகிறேன். அது ஒரு உளவியல் போர். சாதியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல், என்னைப்போல சாதியை எதிர்ப்பவர்களை சாதி வெறியன் என்று சொல்வதை எதிர்க்க ஒரு மனநிலை வேண்டும். அதை நிச்சயம் பரியேறும் பெருமாள் செய்யும்” என்று அவர் கூறினார்.
தென் தமிழகத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.