சென்னையில் சமூக பரவலாக மாறிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 161 பேரில், சென்னையில் 138 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக சென்னை கோயம்பேடு பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருவது ,சென்னை மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: ஏழை மாணவர்களின் கல்வி கனவை நசுக்கும் நுழைவுத்தேர்வு பரிந்துரை

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக, பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை அமல்படுத்தி சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக இந்த பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைபடுவதால், மே 2ம் தேதிக்குள் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கொரோனா தடுப்பு பணிகளுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் வரும் மே 3ம் தேதி பெரும்பாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை, தொடர்ந்து லாக்டவுன் நீடிக்கும் என்கிறார்கள். மேலும் சென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும் என்று மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.