கதை திருட்டு புகாரில் சிக்கிய ஹீரோ படத்தை டிவி மற்றும் OTTயில் வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் வெளியான படம் ஹீரோ. சூப்பர் ஹீரோ படம் என கூறி விளம்பரப்படுத்தப்பட்டாலும் கலவையான விமர்சனங்கள் தான் இப்படத்திற்கு கிடைத்தது. அதில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் பலராலும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனரீதியாக மட்டுமல்லாமல், கதைத்திருட்டு சர்ச்சையிலும் சிக்கியது இப்படம். துணை இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். 2017ல் அவர் பதிவு செய்த வெற்றி என்ற கதையில் இருந்து அது எடுக்கப்பட்டிருக்கிறது என புகார் கூறினார்.

இயக்குனர் சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ் அளித்த கடிதத்தில் அந்த இரண்டு கதைகளிலும் பல ஒற்றுமைகள் இருக்கிறது, நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார்.

போஸ்கோ பிரபு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது ஹீரோ படத்தை டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களாக OTTயில் வெளியிட இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

இதனால் அமேசான் ப்ரைமில் இருந்து ஹீரோ படம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்த படத்தின் டிவி உரிமையை வாங்கிய சன் டிவி அதை டிவியில் ஒளிபரப்ப இயலாதநிலை உள்ளது.

தற்போது ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் மற்றும் டிவியில் படம் பார்ப்பவர்கள் அதிகரித்து உள்ள நிலையில், திடீரென சிவகார்திகேயன் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.