பிரதமர் மோடியின் நான்காவது உரையில் வெறும் அறிவுரைகள் மட்டுமே இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து, தனது உரையில் வயதானவர்களை கவனித்துக் கொள்ளுங்கள், சமூக விலகலை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சக உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும், ஆரோக்ய சேது ஆப்பை பதிவிறக்குக, உதவி தேவைப்படுவோரை கவனித்துக் கொள்ளுங்கள், வேலைகளில் இருந்து பணியாளர்களை நீக்க கூடாது, கொரோனாவுக்கு எதிராக போராடி வருவோரை மதிக்கவும் போன்ற 7 அறிவுரைகளை கூறினார். மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஏழு அறிவுரைகளை சொன்ன பிரதமரிடம், மக்கள் எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல. மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் – பொருள் உதவிகள், பண உதவிகள்தான்.
மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடியில் வெறும் ரூ.65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா? என்று முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம் – தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?
தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; எம்பிக்களின் நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்ற உத்தரவு என அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை. முடங்கியிருக்கும் மக்களுக்கு அரசே அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள் – இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள்.
மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் என்பதன் முழுமையான பொருள், சமூகமே முடக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான். இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப் போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப் போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே.
மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கனவே அறிவித்திருக்க வேண்டுமே! வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்தியச் சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியப் பிரதமர் செய்யப் போகும் உதவிகள் என்ன?
சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம், முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது; அதனால் அவர்களால் நிம்மதியாக வீட்டுக்குள் இருந்திட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கி இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.