1950, அக்டோபர் இரண்டாம் தேதியன்று இந்தோரில் ஒரு பெண்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்ற படேல் உரையாற்றியபோது படேலின் உணர்வுகள் வெறும் சம்பிரதாயமானவையோ, வெற்று வாய்ச்சவடால்களோ அல்ல. படேல் இறப்பதற்கு சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் நேருவை இது நடந்தது அங்கு அவர் சொன்னது ”இப்போது மகாத்மா காந்தி நம்முடன் இல்லை, அவர் தன்னுடைய பிரதிநிதியை நியமித்து அதனை அறிவித்தும் விட்டார். காந்தியின் சீடர்கள் அவர் சொன்னதை அடியொற்றி நடக்கவேண்டும்.”

இந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளை அது. அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனைகள் மும்முரமாக இருந்த சமயத்தில், 1947 ஆகஸ்ட் முதல் நாளன்று படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.

“ஓரளவு சம்பிராதயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்த கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்.”

நேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் எழுதினார், ”அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.”

கடிதத்தில் படேல் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்.”

“நமது நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்…” என்று இளகிய நெஞ்சுடன் கடிதம் எழுதினார் இரும்பு மனிதர்.

கடித ஆதாரம் : ‘சர்தார் பட்டேலின் கடிதங்கள் 1945-50’, வெளியீட்டாளர்: நவ்ஜீவன் பப்ளிஷிங் ஹவுஸ், அகமதாபாத்

1950இல் சர்தார் படேல் இறந்த பிறகு, நேரு படேலின் பிள்ளைகள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார். இந்திராவின் மீது காட்டிய அதே அக்கறையை, சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் மீதும் நேரு காட்டினார். 1952க்கு முன்னரே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நேரு.

மணிபென் படேல் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1957இல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் காங்கிரஸ் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது.

1953 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரகவும் 1957 முதல் 1964 வரை குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் அவர்.

நேருவின் காலகட்டத்தில் காங்கிரஸில் மணிபென் படேலுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல் வல்லபாய் படேலின் மகன் தஹ்யாபாய் படேலுக்கும் காங்கிரஸ் சிறப்பான மரியாதையை வழங்கியது.

1957 மற்றும் 1962இல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1973 முதல் தனது வாழ்நாள் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மணிபென் மற்றும் தஹ்யாபாய்க்குக் வாய்ப்பு வழங்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன என்பதும் குறிப்பிடதக்கது

அதாவது சர்தார் படேலின் மகனும், மகளும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டனர். ஆனால் தனது ஒரே வாரிசான இந்திராவுக்கு நேரு அந்த வாய்ப்பை தனது வாழ்நாளில் வழங்கவே இல்லை .