ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் ஆர்டர் செய்து, அதை தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக டிவிட் செய்து பின்னர் டெலிட் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. இன்றுவரை காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு 144 உட்பட மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக்காவலில் இருக்கும் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான உமர் அப்துல்லாவின் புதிய புகைப்படம் ஒன்று முகத்தில் நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு, வயதான தோற்றத்தில் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் இணையத்தில் கடந்த இரண்டு தினங்கள் முன் வெளியானது.

இப்புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில் பகிர்ந்து, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு இப்படி நிகழ்ந்ததை எண்ணி, நான் சோகமாக இருக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி இதுபோன்று நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. இதெல்லாம் எப்போது முடியும்” என்று கவலைத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் இதை பகிர்ந்து, ‘உமர் அப்துல்லாவின் இப்படத்தைக் காண ஆழ்ந்த கலக்கம்மாக உள்ளது. விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபாரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பிற காஷ்மீர் தலைவர்களைப் பற்றியும் சம அக்கறை உள்ளது. யூனியன் அரசு உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும்’ என்று தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

இப்படம் வைரலாகி வரும் நிலையில் தமிழக பாஜக இந்த புகைப்படத்தை வைத்து உமர் அப்துல்லாவை கிண்டல் செய்துள்ளது. தமிழக பாஜக, ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவின் விலாசத்திற்கு ஆர்டர் செய்துள்ளது. மேலும் அதனை குறிப்பிட்டு தனது டிவிட்டில், “உமர் அப்துல்லாவின் ஊழல் செய்த கூட்டாளிகள் எல்லாம் வெளியே இருக்கும் போது உமர் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் காங்கிரஸ் நண்பர்களை அணுகுங்கள்” என்று கூறியுள்ளது.

தமிழக பாஜகவின் இந்த டிவிட் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கொள்கையை அரசியலை நீங்கள் ஏற்கலாம். ஆனால் அதற்கு என்று இப்படி அவரை கிண்டல் செய்வது தவறு. அரசியல்கட்சியின் டிவிட்டர் பக்கம் அதற்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த சர்ச்சையை தொடர்ந்து பாஜக டிவிட்டை டெலிட் செய்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் இல்லாமல், புத்தகம் கைக்கு கிடைக்கப் பெற்றதும் அதனைப் படிக்குமாறு காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டில் குறிப்பிட்டது வரவேற்ப்பை பெற்றது.

நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுடது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலைப்பு சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்துள்ளது.

அத்துடன் அதன் ‘ஸ்க்ரீன் ஷாட்’டை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு, “அன்புள்ள பிரதமரே… அரசியலமைப்பு சட்ட புத்தகம் விரைவில் உங்கள் கைக்கு வந்து விடும். நாட்டை துண்டாடுவதில் இருந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, அந்த புத்தகத்தை படியுங்கள்” என்று காங்கிரஸ் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டப்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.