இன்று வெளியான சிக்சர் படத்தில் காமெடி நடிகர் கவுண்டமனியை கிண்டல் செய்யும் வகையில் அவரது புகைப்படம் மற்றும் வசனங்கள் தவறாக பயன்படுத்தபட்டதாகக் கூறி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமனி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சாஜி இயக்கத்தில் சதீஷ், வைபவ், பாலக் லால்வானி, கலக்கப்போவது யாரு ராமர் மற்றும் திருச்சி சரவணக் குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிக்சர். முழுவதும் காமெடி கதையையும், மாலை 6 மணிக்கு மேல் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் கவுண்டமனியின் புகைப்படத்தையும், அவரசது வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக கூறி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சிக்சர் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டேனா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய்! சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திர்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ’ போன்ற வசனங்கள் கவுண்டமணியை இழிவு செய்யும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து காமெடி நடிகர் கவுண்டமனியின் வழக்கறிஞர் சசிகுமார் குறிப்பிடும்போது, கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் காலூன்றி 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் கவுண்டமனி. தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சின்னத்தம்பி படத்தில் இவர் நடித்த குக் கந்தசாமி என்ற கதாபாத்திரம் பலரது பாராட்டைப் பெற்ற ஒன்று. இப்படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கவுண்டமனிக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட கவுண்டமனியின் கதாபாத்திரத்தை சிக்சர் படத்தில் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்தையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.

இப்படத்தின் டிரைலரைப் பார்த்த கவுண்டமனி, அதில், அவரது புகைப்படம் மற்றும் அவர் கூறிய வசனங்கள் ஆகியவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வசனத்தை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்தக் காட்சியை நீக்கி அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சிக்சர் படக்குழுவினர் மீது குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.