கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறிகளே இல்லை என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொண்டுள்ளது மகாராஷ்டிரா. தற்போது வரை 7,628 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 47.6% கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகள் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள செய்தியில், “தங்களது மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரில் 80 சதவீதம் பேருக்கு, நோய் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்குதான் லேசானது முதல் மிகுதியானது வரையிலான அறிகுறிகள் உள்ளன.
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அவசர சூழ்நிலைகள் காரணமாக மருத்துவர்கள் டயாலிசிஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளை தொடர வேண்டும். ஏப்ரல் 30 அன்று, தற்போதைய நிலவரத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என அறிவிக்கப்போகிறேன். மக்கள் தங்கள் வீடுகளிலே முடங்கி இருக்க வேண்டும் ஊரடங்கை தவிர கொரோனாவை விரட்ட வேறு வழியில்லை.
மேலும் வாசிக்க: சாதகமான ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி.. அமைச்சரின் கொரோனா அரசியல்
கொரோனா அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் அதனை மறைக்காமலும், தயங்காமலும் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனால் ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் இந்த நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், கொரோனாவை உறுதி செய்வதற்கான பரிசோதனையில் சிலருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.