பிஹார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான 69 அடி நீளம் கொண்ட முற்றிலும் இரும்பால் ஆன பாலம் அமைந்துள்ளது.

இரும்புப் பாலம் பழமையானதால், இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. இதனால் இரும்புப் பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை.

இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க அங்குள்ள ஒரு கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து அந்த கும்பல் கேஸ் கட்டர் மூலம் இரும்புப் பாலத்தை சிறிது சிறிதாகவெட்டியெடுத்து கடத்திச் சென்றுள்ளனர்.

இப்படி 500 டன் எடை கொண்ட இந்த இரும்புப் பாலத்தை 2 நாளில் முழுவதும் வெட்டி கடத்திச் சென்றுவிட்டனர். இரும்புப் பாலம் முழுவதும் காணாமல் போனதையடுத்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு கும்பல் தொடர்ந்து 2 நாட்கள் முழுவதுமாக வேலை செய்து, பாலத்தை கேஸ் கட்டர்கள் மூலம் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது. வெட்டி எடுத்த இரும்புத் துண்டுகளை ஜேசிபி வாகனங்கள் மூலம் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

பிஹார் மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் எனக் கூறி, அவர்கள் இந்தத் திருட்டைச் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த காந்தி சவுத்ரி கூறும்போது, “அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு சிலர் கருவிகளுடன் வந்தனர். நாங்கள் கேட்டபோது நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் என்றும் பாலத்தை வெட்டி எடுக்க வந்துள்ளோம் என்றும் கூறினர்.

புதிய பாலம் போக்குவரத்துக்கு வந்துவிட்டதால் இரும்புப் பாலத்தை எடுத்து விடுமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதனால் நாங்கள் இதுதொடர்பாக சந்தேகப்படவில்லை. 2 நாட்கள் முழுவதுமாக வேலை செய்து பாலத்தை வெட்டித் துண்டு துண்டாக ஜேசிபி வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விட்டனர். எங்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர்கள் நடந்து கொண்டனர்” என்றார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி சுபாஷ் குமார் கூறும்போது, “இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் இதுதொடர்பாக சிலரைத் தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.