இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும், 49வது சர்வதேச திரைப்பட விழா இன்று கோலகலமாக தொடங்கியது.
கோவா தலைநகர் பான்ஜி நகரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா, மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாட் யெஸ்ஸோ நாய்க், கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் ராமகிருஷ ணா, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 212 படங்கள் திரையிடப்படுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் 15 படங்களும், சிறந்த இந்திய படங்கள் பிரிவில் 22 படங்களும் போட்டியிடுகிறது.
தமிழ் திரையுலகில் இருந்து பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட் மற்றும் பாரம் ஆகிய நான்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பராசக்தி மற்றும் மாம் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.