இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (வருவாய் மற்றும்நிதி) லலிதா இன்று ரிப்பன் மாளிகை, கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
அதில் சென்னை மாவட்டத்தில் கடந்த முறை 3768 வாக்குச்சாவடிகளும், 2 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்சமயம் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில் 3754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அதன் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தொகுதி வாரியாக உள்ளது.

நடைபெற்று முடிந்த தொடர்திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 3,526 ஆண் வாக்காளர்கள் மற்றும் 3,629 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 இதர வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 8,540 ஆண் வாக்காளர்கள், 8413 பெண் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 10- 2018-ம் ஆண்டு அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி
* ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 76 ஆயிரத்து 652 ஆகும்.
* பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 24 ஆயிரத்து 366 ஆகும்.
* இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 901 ஆகும்.
* சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 01 ஆயிரத்து 919 ஆகும்.
* குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்
* அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 058 வாக்காளர்களும் உள்ளனர்.