பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ராஜீவ் மேனன், தமிழில் மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கி 18 வருடங்களுக்கு பிறகு இயக்கிய படம் “சர்வம் தாளமயம்”. மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மகேஷிண்டே பிரதிகரம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நெடிமுடி வேனு, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையை மையப்படுத்திய காதல் திரைப்படமாக தயாராகியுள்ள இதில், மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தின் பாடல் வரிகள் தான் என்ற செய்தியை மணமுறுகி ராஜிவ் மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. உலகளவில் பிரசித்திபெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான ‘டோக்கியோ திரைப்பட விழா’, அக்டோபர் 25ம் தேதி தொடங்கி நவம்பர் 3ம் தேதி நிறைவு பெறுகிறது. அதில் ‘சர்வம் தாளமயம்’ படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்படுகிறது. மேலும் சிங்கப்பூர் திரைப்பட விழாவிலும் ‘சர்வம் தாளமயம்’ திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.