கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்பதாக லிங்காயத் சமூகத் தலைவர் குற்றம்சாட்டி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெரும்பான்மை மக்கள் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அம்மாநில அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி லிங்காயத் சமூகத்தினருக்கு உண்டு. அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் இந்நாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் கூட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். அங்கு மாநில தேர்தலில் வெல்ல லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவு கட்டாயம் தேவை.
இந்நிலையில் கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை அரசு, மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் இருந்து கூட 30% கமிஷன் எடுப்பதாக லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திங்களேஸ்வர சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இவர் தான் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகும்போது, 10க்கும் மேற்பட்ட லிங்காயத் தலைவர்களுடன் அவரை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தவர் ஆவர். அதேபோல எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என்று எச்சரித்தவரும் இவர்தான்.
இது தொடர்பாக திங்களேஸ்வர சுவாமி கூறுகையில், “கமிஷன் பற்றி எங்களுக்குத் தெரியும். மடங்களின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக ஏதேனும் மானியங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றால், அந்தத் தொகையில் இருந்து ஆளும் பாஜக அரசு 30% கமிஷனாகக் எடுத்துக் கொள்கிறது.
அப்படி இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், மானியங்கள் விடுவிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திங்களேஸ்வர சுவாமியின் இந்த குற்றச்சாட்டு பெரும் கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “யாருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அளித்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பாஜக நிர்வாகியும் ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பாட்டீல், அப்போதைய அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் 40% கமிஷன் கேட்டதாகக் குற்றம்சாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஆளும் பாஜக அரசு 30% கமிஷன் கேட்பதாக திங்களேஸ்வர சுவாமி குற்றம்சாட்டியுள்ளது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளத்தில் காண: https://www.facebook.com/savenra/videos/553493092785276/