தனது சொத்துகள் மீட்கப்பட்டது குறித்தும், அதனை கோவிலுக்கு எழுதி வைத்த நிகழ்வு குறித்தும் பழம்பெரும் நடிகை காஞ்சனா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70 -களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து காஞ்சனா கூறுகையில், “நான் விமானப் பணிப்பெண்ணாக இருந்தேன். இயக்குநர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. ஏற்கனவே வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டிருந்தார். எனவே என் பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 1964-ல் அப்படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன. 46 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். வாணிஸ்ரீ தான் எனது நெருங்கிய தோழியாக இருந்தார்.
நான் சம்பாதித்த பணத்தை, சென்னை தி.நகரில் சொத்துகள் வாங்கிப் போட்டேன். ஆனால் எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டேன்.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டெடுத்தேன்.
எனது வேண்டுதலின் படி, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்தேன். திருமணம் செய்து கொள்ளாமலே என் வாழ்க்கையை கழித்து விட்டேன். தற்போது என் தங்கையின் பராமரிப்பில் நன்றாக இருக்கிறேன்” என்று கூறினார்.
Trackbacks/Pingbacks