தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, “அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்’’ என்று அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து 20-ம் தேதியில் இருந்து பிரசாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். பின்னர், காரில் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்துக்கு வந்து தங்கினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை 7.20 மணியளவில் ஸ்டாலின் பிரசாரத்தை தொடக்கினார். வீட்டில் இருந்து அவர் நடந்தே சென்று மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரித்தார்.
ஸ்டாலினுடன் திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் தி.மு.க.-கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் நடந்து சென்றனர். 9.45 மணிக்கு கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் மணக்கால் கிராமத்துக்கு ஸ்டாலின் சென்றார்.
அங்கு மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
பின்னர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டிகலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் எப்படி ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். 3 தொகுதிகளுக்கு அறிவிக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டுள்ளதால், 2, 3 நாளில் அந்த தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. மேலும், எடப்பாடி அரசை எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் தலைமையிலான 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்த தீர்ப்பு வரும்போது, 18 தொகுதிகளில் தேர்தல் முடிவும் வரும். அப்போது எடப்பாடி அரசு அகற்றப்படும் நிலை வரும்’’ என்று எடுத்துரைத்தார்.
மேலும் லட்சகணக்கில் திரண்டு இருந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘டெண்டர் விவகாரத்தில் ரூ3000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
சிபிஐ விசாரணைக்கு தற்காலிகமாக எடப்பாடி தடைஉத்தரவு பெற்றிருக்கலாம். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது குட்கா ஊழல் வழக்கு உள்ளது. இப்படிப்பட்ட அதிமுகவுடன் ஊழலுக்கு எதிராக பேசும் மோடி கூட்டு வைத்துள்ளார்.
அதிமுக பற்றி கேவலமாக பேசி, புத்தகம் போட்டு அதை கவர்னரிடம் மனுவாக அளித்தவர்களும் இப்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பெயரை சொல்லி, இந்த மேடையின் தரத்தை குறைத்துக் கொள்ளவிரும்பவில்லை’’ என்றார். இதை அமோத்தித்த கூட்டம் அர்பரித்தது ..