“ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகளுக்கு பாஜ அளிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 என்ற திட்டத்தை விட, ராகுலின் இந்த அதிரடி வாக்குறுதி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. மேலும், முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இம்முறை ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், வலுவான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே பணிகளை தொடங்கியது. இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 22 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 20 துறைகளின் கீழ் அந்தந்த துறைகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். பல்வேறு சமூகத்தினர் இடையே மொத்தம் 175 ஆலோசனை கூட்டங்கள் மற்றும் இணையதளம் வழியாகவும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, வரைவு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான முடிவெடுக்க, கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், மல்லிகார்ஜூனா கார்கே, ஏ.கே.அந்தோணி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தேர்தல் அறிக்கை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இக்கூட்டத்தை தொடர்ந்து, ராகுல்காந்தி அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பெறுவார்கள்.
இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். இந்த திட்டத்தின் மூலம் 25 கோடி பேர் நேரடியாக பயன்பெறுவார்கள். வறுமைக்கு எதிரான இறுதி தாக்குதல் தொடங்கியுள்ளது. நாட்டை விட்டு வறுமையை நாங்கள் ஒழிப்போம்.
மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகள், நிதி தாக்கங்கள், கணக்கீடுகள் குறித்து பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது மிகவும் சக்திவாய்ந்தது.
இதுகுறித்து பல்வேறு நிபுணர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதனை செயல்படுத்த முடியும் என்பதால்தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், முழுக்க முழுக்க பொதுமக்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கும்.
பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு திட்டங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, விவசாயம், குழந்தைகள் மேம்பாடு, கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, நகர்ப்புற வளர்ச்சி, ஆயுதப்படைகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பாதுகாப்பு விவகாரம், சுற்றுச்சூழல், வெளியுறவு கொள்கை ஆகியவை தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்துள்ள, ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதன்படி 20 சதவீத ஏழைக்குடும்பங்கள், அதாவது 5 கோடி ஏழைக்குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.72,000 பெறுவார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் வங்கி கணக்கில் மாதம் ரூ.6,000 வீதம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்றார்.