நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (3.1.2022) தொடங்கியது. தமிழ்நாட்டில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், “தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும். ஆனால்,அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது. நீங்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கில் இதை கூறவில்லை. மாறாக,அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிவுறுத்துகிறேன்.

மேலும்,ஒமைக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதன் காரணத்தால் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருந்த நமது பயணம் தடைபடும் சூழல் நிலவுகிறது.

முந்தைய கொரோனா வைரஸை விட ஒமைக்ரானின் நோய் தாக்கம் குறைவுதான். எனினும்,தடுப்பூசி செலுத்துங்கள் என அன்போடு,பணிவோடு, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில்,தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவு.

எனவே,புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம். நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்க வேண்டும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “தமிழ்நாட்டை பொறுத்தவரை 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே போடப்படும்.

சிறுவர்களுக்கு தனியாக முகாம் நடத்தியும் ஊசி போடப்படும். பெரியவர்களுக்கான முகாம்களுடன் இணைந்து நடத்தினால் தனிவரிசை ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்த அந்த பள்ளிகளிலேயே போடப்படும். இதற்காக ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பார்கள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் விரைந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் போட்டு முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. மருத்துவமனைகளில் சேர்ந்து 3 நாட்களில் ‘நெகட்டிவ்’ வந்து விடுகிறது. இருப்பினும் 5 நாட்கள் தங்கவைத்து கண்காணிக்கப்படுவார்கள். அதன்பிறகும் சோதனை நடத்தி ‘நெகட்டிவ்’ வந்தால் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.